இத்திரைப்படத்தைப் பற்றி எழுதும் முன், கலைஞர்களுக்குச் சமூகத்தின் மீதான ஆழமான பார்வை தவிர்க்க முடியாதது என்பதை உறுதியாகச் சொல்லி ஆரம்பிக்கிறேன்.

காட்டிலோ நாட்டிலோ, மிருகங்களுக்கு உணவு ஏதேனும் கிடைத்தால் அது செய்யும் முதல் வேலை தனக்குத் தேவையானதை முதலில் பிரித்து எடுத்துக்கொண்டு ஒதுங்கிவிடுவது. தன் கூட்டத்தில் பிறருக்கு இருக்குமோ இல்லையோ என்று கவலைப்படாமல் சுய தேவையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும். வேட்டையாடும் மிருகங்கள் தங்கள் பசிக்காகத்தான் வேட்டையாடுமே ஒழிய, பாவம் பார்த்தோ இரக்கம் கொண்டோ தங்கள் வேட்டையை ஒருபோதும் நிறுத்தாது இதில் சில மிருகங்கள் விதிவிலக்காக இருக்கலாம், சூழ்நிலையைப் பொறுத்து சில மாறுதல்கள் அவ்வப்போது நடக்கலாம்… அவ்வப்போதுதான்.

மிருகங்களைவிட நாம் மேம்பட்டவர்கள், பரிணாமத்தில் வளார்ந்தவர்கள், சிந்திக்கத் தெரிந்தவர்கள், நமக்கென்று வாழும் பண்பாடு உண்டு என்றெல்லாம் மார் தட்டிக்கொள்ளும் நாம், மேற்கூறிய மிருகக் குணங்களிலிருந்து எங்கு வேறுபடுகின்றோம் என்பதையும் சற்று சிந்திக்க வேண்டிய காலத்தில் வாழ்ந்துவருகிறோம். நம் தேவைகளையோ நம் இலக்குகளையோ, அல்லது நம் ஆசைகளையோ எப்பாடுபட்டாவது நிறைவேற்றிக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம். ஒரு கோணத்தில் மனித இனத்தின் வளர்ச்சிக்கும் தனிமனித வாழ்வின் மீதான குறைந்த அளவுப் பற்றிற்கும் இவை தேவை என்பதை நாம் ஒப்புக்கொண்டாலும். நாம் செய்யும் செயல் நாம் வாழும் இம்மண்ணிற்கும் அதில் பிழைக்கும் மக்களுக்கும் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றிப் பெரும்பாலானோர் சிந்திப்பதில்லை.

Even the Rain,' Icíar Bollaín's Political Film - Review - The New York Times

ஆனால் அதற்கான அவசியத்தை இச்சமூகம் நமக்குக் காட்டாமலும் இல்லை. இந்த மிருகப் பண்பிலிருந்து சராசரிக்கும் சிறிது அதிகமாய் விடுபட்டவர்கள், நான், எனது என்கிற கருத்தாக்கங்களைக் கலைத்து நாம், நமது என்ற நோக்கில் பல தத்துவங்களைப் பல அறிஞர்களும் பல கலைஞர்களும் (இப்படத்தின் இயக்குநர் போல) உருவாக்கித் தந்தனர்.

ஆனால் ஆதிக்கக் குடிகளுக்கு இலகுவான தத்துவங்கள் மட்டும் நிலைத்து மாற்றங்கள் உண்டாயின. இந்த செய்தியை இப்படியாக நிறுத்திவைப்போம்.

இனி Even the Rain படத்திற்கு வருவோம்…

சுமார் 500 சில்லறை ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கொலம்பஸ்கள் பற்றியும் அன்றிலிருந்து சுமார் 500 சில்லறை ஆண்டுகளுக்குப் பின் (கி.பி. 2000) வாழ்ந்த டேனியல்கள் பற்றியும் நேர்த்தியான திரை மொழியில் எடுக்கப்பட்ட படம் இது..

இப்படத்தில் செபாஸ்டியன் என்பவர் கொலம்பஸ் தமது நான்கு பயணங்களின் ஒரு கட்டமாகத் தென் அமெரிக்கா வந்ததையும், அங்கு அவர் எதற்காக வந்தார் என்பதையும், அங்கு இருந்த பழங்குடி மக்களை அவர் என்ன செய்தார் என்பதையும் கதையாக எழுதி அதைத் திரைப்படமாக எடுப்பதற்கு ஒரு குழுவினருடன் பொலிவியாவில் உள்ள கோக்கமாம்பா நகருக்கு வருகை தருகிறார். படத்தினுள் உருவாகும் படத்தின் தயாரிப்பாளர் கோஸ்ட்டா. உண்மையில் படத்தை ஒரு கட்டத்தில் தயார்செய்வது அவர்தான்.

இப்படத்தின் திரைக்கதை நேர்க்கோட்டில் செல்லாது. அதுதான் அதன் பலமும்கூட. படத்தின் ஒரு பகுதி செவ்விந்தியர்களைச் சித்திரவதைக்கும் இன அழிப்பிற்கும் உள்ளாக்கும் கொலம்பஸையும் இன்று தண்ணீரை முழுக்கத் தனியார்மயப்படுத்தி உள்ளூர் வாசிகள் கிணற்றுநீரையும், ஏன், மழைநீரைக்கூடப் பயன்படுத்தத் தடை போடும் பொலீவிய அரசையும் ஒப்பிடுகிறது. இயற்கை வளங்களை தனியாரிடம் விற்கும் அரசின் கொள்கை பற்றிய கதை இன்னொரு பகுதியாகவும் நகர்கிறது.

கொலம்பஸ் பற்றிய அனைத்துக் கற்பிதங்களும் அழகாக அடித்து நொறுக்கப்படுகின்றன. அவர் பயணித்த அனைத்து இடங்களுக்கும் ஸ்பெயின் நாட்டு அரசர்களின் நிதி உதவி மற்றும் ஆட்கள் உதவியோடு, ஆதாயம் தேடியே பயணித்துள்ளார். அதாவது தங்கம் தேடி, மிளகு தேடி, இன்னும் பல வணிகப் பொருட்களின் வேட்டைக்காவே பயணித்துள்ளார் என்பதையும், இந்தத் தேடுதலுக்கு அவர் பல இனங்களை அடிமைப்படுத்தியும் சித்திரவதை செய்தும் இருக்கிரார் என்பதையும் இப்படம் நமக்குக் காட்டுகிறது. சில இடங்களில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அதாவது ஒரு இனமே, கொலம்பஸ் வருகைக்கு பயந்து விஷ வேர்களை உண்டு மாய்த்துக்கொண்டுள்ளனர் என்பது வரலாற்றிலிருந்து நாம் அறிந்துகொண்ட தகவல்.

இத்திரைப்படத்தினுள் எடுக்கப்படும் திரைப்படத்தில் வரும் பழங்குடிக் கதாபாத்திரங்களை, கொலம்பஸ் ஊர் வாசிகளிடத்திலிருந்தே இப்படக்குழு தேர்வுசெய்யும். அதில் தேர்வான டேனியல் என்பவர் கொலம்பஸின் அதிகாரச் சுரண்டலுக்கு எதிரான பழங்குடி மக்களின் குரலாக ஒலித்திருப்பார். நிஜத்திலும், அதாவது கதை நிகழும் காலத்திலும் தண்ணீருக்காகப் போராடும் மக்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் டேனியல் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சி அமைப்பு படத்தின் சுவாரசியத்தை வெகுவாக கூட்டியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

500 வருடங்களாகியும் மக்களின் நிலை மாறவில்லை, அரசின் கொள்கைகளும் மாறவில்லை, இயற்கையைச் சுரண்டும் அதிகார வர்க்கத்தின் கனவும் அதை எதிர்த்துப் போராடும் மக்களின் மனநிலையும் நகல் எடுத்தது போன்று அப்படியேதான் தொடர்கின்றன என்பதுதான் இப்படத்தின் மையம் என்று நான் புரிந்துகொள்கிறேன்…

இன்று வரையிலும் அதிகார அமைப்புகள் இருபெரும் சுரண்டல்களை நடத்திக்கொண்டிருக்கின்றன. ஒன்று, சக உயிர்களின் உழைப்பைச் சுரண்டுதல் (இதைப் படிக்கும்போது 60% வரியுடன் நமக்கு பெட்ரோல் விற்கும் ஒன்றிய அரசு உங்கள் நினைவிற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல), இன்னொன்று, நாம் வாழும் பூமியின் வளத்தைச் சுரண்டுதல். இதற்குப் பல வகையில் நாம் அனைவரும் வாழ நினைக்கும் ஆடம்பர வாழ்க்கைமுறையும் ஒரு காரணம். இங்கு நான் ஆடம்பரம் என்று குறிப்பிடுவது, நம் தேவைக்கு அப்பாற்பட்டு நாம் வாங்கும் ஒரு சிறு குண்டூசியும் ஆடம்பரப் பட்டியலிலேயே சேரும் (என்னளவில்). இதன் ஒரு சிறு விளைவுதான் இன்று நிலவும் நிலக்கரித் தட்டுப்பாடும்.

அதிகாரம் தங்கள் உழைப்பையும் இயற்கை வளங்களையும் சூறையாடும்போது மக்கள் உரிமைக்குரல் எழுப்பிப் போராடி வெற்றி பெறும் கதையைச் சொல்கிறது Even the Rain. ஒரு கலைஞனின் ஆழமான சமூகப் பார்வையில் பிறந்த படைப்பு இத்திரைப்படம்.

நன்றி:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here